இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு; முக்கியமான இடங்களில் தீவிர சோதனை

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுவதால் நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா நாளை (15ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்தாண்டும் சுதந்திர தினத்தன்று அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசிய கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாளை வரை ‘வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி’ என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் தங்கள் சமூக ஊடகங்களின் முகப்பு புகைப்படமாக (டிபி) தேசிய கொடியை வைக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதனால் டெல்லி செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்புப்படையினர் முதல் டெல்லி போலீசார் வரை பாதுகாப்புப்படை பிரிவுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாகனமும் முற்றிலும் சோதனைக்குட்ப்பட்ட பிறகே டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையே ரயில் நிலைய கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணக்கொடி கலரில் ஜொலித்து வருகின்றன. நொய்டா மற்றும் காசியாபாத்தில் இருந்து நாளை(15ம் தேதி) வரை டெல்லி நகருக்குள் வரும் கனரக வாகனம் மற்றும் பொது பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து இந்த பகுதியாக வரும் வாகனங்கள் மாற்று வழியாக திருப்பிவிடப்பட்டு வருகின்றன. 3 ஆயிரம் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று இரவு 10 மணி முதல் டெல்லி எல்லையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழாவிற்கு 1800 பேர் சிறப்பு பார்வையாளர்காக அழைக்கப்பட்டுள்ளனர். 75 ஜோடிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்கின்றனர். டெல்லியில் நாளை மறுநாள் வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.
இதேபோல் சென்னை கோட்டை கொத்தளத்தில் முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகிறார். விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னை முழுவதும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் சில தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், தீவிரவாதிகள் கடல் அல்லது ஆகாய மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். எனவே அந்தந்த மாநில காவல்துறையினர் பாதுகாப்பு விஷயங்களில் கவனமுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உச்ச காட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் அதிநவீன படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிர ரோந்து பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக்கூடும் பகுதியான பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, விமான நிலையங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் வழிபாட்டு தலங்களான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், சென்னையில் அமைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் என அனைத்து இடங்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள், 20க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஆயுத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை உளவுத்துறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருக்கிறார்களா என்று உளவுத்துறை போலீசாருடன் இணைந்து சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் போலீசார் நேற்றிரவு விடிய சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, ஆயுதப்படை, அதிரடிப்படை, ஊர்க்காவல்படை என மொத்தம் 1.20 லட்சம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Independence Day 2023: Delhi Police on high alert, issues advisory, warns about potential impersonation

Leave a Reply

Your email address will not be published.