ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இயற்கையாக வளரும் செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக நடைபெற்று வருகிறது.செம்மர கட்டை கடத்தலில் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர சர்வதேச அளவிலான கடத்தல்காரர்களுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புகள் உள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக ஆந்திர மாநில அரசு கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தும் பணியில் ஏராளமான கடத்தல்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக செம்மர கடத்தல் பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் செம்மர கடத்தலுக்காக, கடத்தல் காரர்கள் வழக்கமாக பயன்படுத்தும் வனப்பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூன்று இடங்களில் செம்மரக்கட்டைகளை வெட்டி தூக்கி வருவதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி
கைது செய்ய முயன்றனர். ஆனால் கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை விரட்டி சென்ற போலீசார் தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 47 பேர் மற்றும் திருப்பதியை சேர்ந்த ஒருவர் ஆகியோர் உட்பட 48 பேரை கைது செய்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 51 செம்மரக்கட்டைகள்,
இரண்டு கார்கள் ஒரு ஆட்டோ ஆறு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு செம்மரக்கட்டைகளை கடத்தி சிறைக்கு சென்று மீண்டும் அதே தொழிலுக்கு வந்த ஆறு பேர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

