ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் மாநில ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலின் போது நடைபெற்ற தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக ஈரான் அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையும் வெளியிடப்பட்டது.அதன்படி, ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை பல்வேறு மத மற்றும் அரசு மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலி மற்றும் பிரியாவிடை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜூலை 6 அன்று இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. பின்னர் ஜூலை 7 அன்று புனித நகரமான கோமில் சிறப்பு தொழுகை நடைபெறும். இறுதியாக ஜூலை 9 அன்று வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள இமாம் ரெசா புனித தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை இறுதி அஞ்சலி செலுத்த வருவார்கள் என ஈரான் அரசு எதிர்பார்க்கிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் காரணமாக பிரதமர் மோடி நேரில் பங்கேற்க முடியவில்லை.இதனால், இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் மாநில ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அஞ்சலியை செலுத்தி இரங்கல் தெரிவிக்க உள்ளனர்.இந்தியா மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால நட்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் தூதரக உறவுகளை கருத்தில் கொண்டு, இந்த உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்பது இருநாடுகளின் உறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

