சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டத்தின் விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி, இன்று பிற்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த முதல்கட்ட எஞ்சின், பூமிக்கே திரும்பியது. புவிவட்டப்பாதைக்குள் நுழைந்த பால்கன் ராக்கெட், புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை கடந்தது. நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும். இந்த விண்வெளி பயணம் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.சுபான்ஷு சுக்லா , பயணத்தின் தொடக்கத்தில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்ட மூவர்ண கொடி, நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்று சொல்கிறது. இது என்னுடைய ISS பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்திய விண்வெளிப் பயணத்தின் தொடக்கம்.இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து இந்திய விண்வெளித் திட்டத்தை தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத் என்று விண்வெளியில் இருந்து மக்களுடன் பேசினார் சுபான்ஷு சுக்லா.

