படுக்கை வசதியுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2023 – 24ம் ஆண்டிற்குள் 120 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 120 ரயில் பெட்டிகளில் 75 பெட்டிகள் இருக்கையுடனும், 27 பெட்டிகள் படுக்கை வசதியுடனும் இருக்கும். நாடு முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க 8,000 ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
நாட்டில் விரைவு ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக புது டெல்லியில் இருந்து கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3வது சேவை மும்பை – காந்தி நகர் வழித் தடத்திலும், 4வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும், 5வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழி தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலைய முனையத்தில் இருந்து சோலாப்பூர் வரை வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.