இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் வானில் அதிக அளவு எரிமலைச் சாம்பல் பரவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 5.30 மணி முதல் தற்காலிகமாக தனது சேவைகளை நிறுத்தியது.இதன் காரணமாக ஒரே நாளில் சுமார் 22,800 பயணிகள் பாதிக்கப்பட்டனர். சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோகா, கோலாலம்பூர் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.மேலும், பாலி, சுராபாயா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் பாதிக்கப்பட்டன. சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறவும், தங்களது உடைமைகளை மீட்டெடுக்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதற்கிடையில், எரிமலை வெடிப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் இரண்டு பெரிய சாம்பல் மேகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.அதில் ஒரு சாம்பல் மேகம் சுமார் 20,000 அடி (6,100 மீட்டர்) உயரம் வரை எழுந்து ஜகார்த்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதித்துள்ளது.மற்றொரு சாம்பல் மேகம் 50,000 அடி (15,200 மீட்டர்) உயரத்துக்கும் மேலாக எழுந்து, சுண்டா ஜலசந்தி மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மேல் பரவி வருகிறது.எரிமலைச் சாம்பல் காரணமாக விமானப் போக்குவரத்துக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் என்பதால், நிலைமையை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

