சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18-ம்தேதி வரை சென்னையில் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொது நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனிக்கு சென்று, அங்கு நடைபெற்ற ‘பிராங்பேர்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்துஅரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
அதேபோல, பன்னாட்டு புத்தகக் காட்சியை தமிழகத்தில்நடத்தவும் அதில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி பொது நூலகத் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து, 2023 ஜன.16, 17, 18-ம் தேதிகளில் முதல்முறையாக சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்பட உள்ளது.
இலச்சினை வெளியீடு: இதற்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சிசென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கண்காட்சி இலச்சினை, நிகழ்ச்சி நிரலை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது:
இந்த புத்தகக் காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடைபெற உள்ளது. சிறந்த தமிழ் பதிப்புகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 50 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வர உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி, பபாசி தலைவர் எஸ்.வயிரவன், துணைத் தலைவர் பெ.மயிலவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியின்போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத்திட்டத்தை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. கண்காட்சியின் ஒருபகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடும் நடக்க உள்ளது.
சென்னையில் பபாசி சார்பில்ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் காட்சியுடன் சேர்த்து இந்த பன்னாட்டு கண்காட்சியும் நடக்கஉள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பபாசி நிர்வாகிகள் கூறினர்.