மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ப்ரீத்தி துபே, உதிதா தலா ஒரு கோல் அடித்தனர். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் நாளை (நவ. 12) தென் கொரியாவை எதிர்கொள்கிறது.