சேவையின் தொடக்க ஆஃபராக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps+ வேகத்தில் அளவில்லாத இணைய சேவை கூடுதல் கட்டணம் இன்றி வழங்க உள்ளது.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் முனைப்பில் ஜியோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது படிப்படியாக ஒவ்வொரு நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகியவற்றில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடக்க ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதோடு இந்த 5ஜி சேவையை மக்கள் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இணைய சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு முதல் 5ஜி சேவைக்கான அனைத்து சோதனைகளும் முடிவடைந்து அறிமுகம் செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் முதலாக நாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவை பொறுத்தமட்டில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தான் ஹோலி பண்டிகையையொட்டி இன்று நாடு முழுவதும் 27 நகரங்களில் புதிதாக 5ஜி சேவையை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை மக்கள் இன்று முதல் பயன்படுத்தலாம்.
இதுகுறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛நாட்டில் இன்று 13 மாநிலங்களில் 27 இடங்களில் ஜியோ 5ஜி சர்வீஸ் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் 331 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவை கிடைக்கிறது. 2023 டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஜியோவில் 5 ஜி சேவையை வழங்குவதை இலக்காக வைத்துச் செயல்படுகிறோம்” என்றார்.