வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காய பார்சல் அனுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர், வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் மற்றும் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்துடன் பார்சல் ஒன்றையும் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ஷெட்காரி சங்கதானா மற்றும் ஷேத்காரி விகாஸ் மண்டல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘வெங்காயம் மற்றும் பிற விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.
இதன் மூலம் இந்திய விவசாயிகளுக்காகன சர்வதேச சந்தை வர்த்தகத்தை ஏற்படுத்த முடியும். வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக குவிண்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும். பயிர் சாகுபடி செய்வதற்காக செலவு மிகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், விளைபொருட்களை விற்கும் போது மிகக் குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பிரதமர் மோடிக்கு வெங்காய பார்சல் அனுப்பி உள்ளோம்’ என்றனர்.