பெங்களூரு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகா முழுவதும் பந்த் நடைபெறவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்து ஊரடங்கு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாய சங்கத்தினரும் பந்த் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வர்த்தகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இவை அனைத்தும் கருத்தில் கொண்டு நாளை மாநிலம் தழுவிய அளவில் பந்த் போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் ஆயத்தமாகியுள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கன்னட அமைப்புகள் சார்பில் நாளை சுதந்திர பூங்கா வரை மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஊர்வலமோ, பேரணியோ நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்ப்புகளை தாண்டி பேரணி நடத்துவோம் என கன்னட அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.
பெங்களூரை தவிர மற்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பது பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பந்த் போராட்டத்தினால் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கருதிய ஒன்றிய அரசு, கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கர்நாடகாவில் “மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் நாளை பணிக்கு வர வேண்டும். நாளை நடைபெறும் ‘பந்த்’-ல் போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பங்கேற்க கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பள்ளிகளும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.