கர்நாடகா சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்; மேகதாது அணை உறுதியாக கட்டப்படும் என முதல்வர் சித்தராமையா தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

உரிய அனுமதி பெற்றதும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி உரிய அனுமதிக்கு பிறகு தொடங்கப்படும் என்றும், ஏற்கனவே 3 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடக்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. அணை கட்டினால் மூழ்கும் பகுதிகள், வெட்டப்படும் மரங்களின் கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடப்பதாகவும் கர்நாடகா அரசு தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் செயல்படுவதாக கூறி, தஞ்சாவூரில் அவரது உருவபொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது. அணை கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் அறிவிப்பால் தமிழக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முறையான அனுமதி பெற்று விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடகா சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றும், மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகா அரசுக்கு, மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *