ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று , புயல் ஆகிய சூழலை தாங்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தை இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, மேலும், ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைத்து, நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்த்தார்.

