முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் வருகிற 26ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைவிடங்களின் சிறப்பம்சங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன. கருணாநிதி சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் எழிலோவியங்கள் எனும் அறையில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல் அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள், போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் என தனித்தனி அறைகளில் கருணாநிதி பெருமை மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும், கருணாநிதியின் நினைவிடமும் பல ஆண்டுகள் நெஞ்சைவிட்டு நீங்காமல் ஆட்கொண்டிருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

