ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்லாமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகளில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.16.19 கோடியில் பணிமனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் பாடியநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகள் மேம்படுத்தப்படும். ரூ.87 லட்சத்தில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த வாகனம் இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தும் பொருட்டு வட்டாரப் போக்குவரத்து/ பகுதி அலுவலகங்களுக்கு 145 இலகு ரக வாகனங்கள் வாங்கிட ரூ. 6.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ரூ.10 கோடியில் ஓட்டுநர் தேர்வு தளம் 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் (பிப்ரவரி 2023 வரை) 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.02.2023 அன்று வரை மாநிலத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 2.67 கோடி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது விருப்பமான இடத்திலிருந்தோ பழகுநர் உரிமம் (LLr) தேர்வினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமலே மேற்கொள்ளலாம். 40 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழைப் பெற்று உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் இல்லாத விண்ணப்பதாரர், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பழகுநர் உரிமம் (LLr) தேர்விற்காக நேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
2022-23ம் ஆண்டில் (பிப்ரவரி 2023 வரை) 3.49 லட்சம் பழகுநர் உரிமங்கள் தொடர்பு இல்லாத சேவை மூலமாகவும், 6.83 லட்சம் பழகுநர் உரிமங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன. ழகுநர் உரிமத்தைப் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.