லதா மங்கேஷ்கர் என்னும் இசை சகாப்தம்..!

சிறப்பு செய்திகள்

மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை தனது 92-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மும்பை சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மும்பை சிவாஜி பூங்காவில் அவரது இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாடகிக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், வித்யா பாலன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கோவிட்-19 மற்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, ஜனவரி 8ஆம் தேதி மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கோவிட் நோயிலிருந்து குணமடைந்த பாடகியின் உடல்நிலை சனிக்கிழமை மோசமடைந்ததையடுத்து வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை காற்று அளிக்கப்பட்டது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர் பிரிந்தது.

பண்டிட் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் சேவந்தி மங்கேஷ்கர் ஆகியோரின் மகள் லதா இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை நன்கு அறியப்பட்ட மராத்தி இசைக்கலைஞர் மற்றும் நாடக கலைஞர் ஆவார். அவர் முதலில் தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார், பின்னர் அவரது பல நாடகங்களில் குழந்தை நடிகையாக தோன்றினார்.

பாரத ரத்னா விருது பெற்ற அவர், 36 இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 25,000 பாடல்களைப் பாடியுள்ளார். இருப்பினும், அவரது தமிழ் பாடல்கள் என்றும் நிலைப்பவை. 1980 களில், லதா மங்கேஷ்கர் இசை மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் இணைந்து பல பிரபலமான தமிழ் பாடல்களை உருவாக்கினார், அப்பாடல்கள் அவரது குரலுக்கு தமிழ் இசை ஆர்வலர்களிடையே பெரும் நன்மதிப்பையும் தனியொரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது.

1956 ஆம் ஆண்டு எந்தன் கண்ணாளன் பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு, 1980 களின் பிற்பகுதியில், ஆனந்த் (1987) படத்திற்கான ஆராரோ ஆராரோ மற்றும் சத்யா (1988) படத்திற்கான வலை ஓசை ஆகிய பாடல்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து பாடி, தமிழ் சினிமா துறையில் மீண்டும் தன் வரவைப் பதிவு செய்தார்.

இசைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவரது பிரிவின் துயரால் இசை உலகமே ஸ்தம்பித்துள்ளது. அவரது பாடல்கள் என்றும் ஒலித்திருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *