சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் இன்னிசை விருந்து

செய்திகள் தமிழ் சங்கங்கள்

பிப்ரவரி 4 ஆம் தேதி, நம் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் 2022 பொங்கல் விழாவினை அமர்க்களமாய் இன்னிசை விருந்தாகக் கொண்டாடியது!
அன்று பல்சுவை இசை அரங்கேற்றங்கள்!

‘முரசு கலைக்குழு’ வழங்கிய ‘குறும்பராட்டமும்’, பறை இசையோடு அசைந்து ஆடிய பிறவி இசையான நமது கிராமிய இசையும் பாடல்களும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் எங்களின் கால்களை தாளம்போடச் செய்தது! அது மட்டுமின்றி இன்று கணினியில் கவி எழுதத் தூண்டிய
மூத்த இசை எங்கள் இசை! நன்றிகள் பல!

சென்னையில் ஓர் இசைத்தோட்ட மேடை அமைத்து நேரடி ஒளிபரப்பாக அதிகாலை நேரத்தில் விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்ஸ்’ களான தேனொழுகப் பாடும் பிரியங்கா, மலேசியா வாசுதேவன் முதல் பலரின் குரலை நமக்கு நினைவூட்டும் திவாகர்,கிளீன் பாய் என்று நல்ல பெயர் வாங்கி, கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் மெல்லிசைகளையும் பாடி நம்மை ரசிக்க வைத்த அபிலாஷ், தன் குரலிலிருந்தும் மாறுபட்டுப் பாடும் பன்முக குரல்வளம் கொண்ட ஹரிப்பிரியா என வந்து நமக்காக நான்கு மணிநேரம் பாடி அசத்தினர்.

வெறும் பாட்டு மட்டுமா?மணி அன்ட் பேன்ட் மணி கார்த்திக் தேவராஜ் தன் சூப்பர் சிங்கர் இசைக்கலைஞர்களுடன் வந்திருந்து அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தனர் என்றே சொல்ல வேண்டும். இதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்ட இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் குழுவின் முதன்மை சவுண்ட் என்ஜினீயர் கார்த்திக் சேகரனை பாராட்டியே ஆகவேண்டும்!

இந்நிகழ்வை சிறிதும் தொய்வில்லாமல் அரட்டை அடித்தபடி கலகலப்பாய் கொண்டு சென்றனர் தொகுப்பாளர்களான அனைவருக்கும் தெரிந்த ‘குக் வித் கோமாளி’ பாலாவும்,மணிமேகலையும்.

இங்கே தமிழ் மக்கள் அனைவரும், இதனை ஏற்பாடு செய்த சங்கத்தின் தலைவர் குமார் மற்றும் சங்க உறுப்பினர்களை மனமாரப் பாராட்டிக் கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இதனை ஏற்பாடு செய்து, தங்கள் நேரத்தை ஒதுக்கி சிறப்பித்த ராம் வெங்கட்,செல்வகிரி, வாசு ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

இத்தருணத்தில் இத்தனை அருமையாக இந்நிகழ்வு நடைபெற ஆதரவு அளித்த நன்கொடையாளர்களான ‘சியா டெக்’-இராஜகுரு, எலைட் டென்டல் மற்றும் விகே ஆர்த்தோடான்டிக்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்று சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 2022 க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அடுத்த தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை அறிமுகப்படுத்தினர்.

இன்னிசை விருந்தளித்து பங்கேற்ற அத்தனை பேருக்கும் நம் தமிழ்ச் சங்கம் சார்பாக செயலாளர் செல்வகிரியின் பெற்றோர் திரு.அருணகிரி,திருமதி.பொற்செல்வி மற்றும் சித்தி-சித்தப்பா திரு.அம்பலவாணன்,திருமதி.மலர்விழி மற்றும் அரவிந்த்,அருண் ஆகியோர் அங்கு சென்று தங்கள் செலவில் வெற்றிக்கோப்பைகளை-ட்ரோபிஸ் அனைவருக்கும் நேரடியாக வழங்கி சிறப்பித்தனர்.

இவ்வாறாக கொரோனா காலத்தில் வீட்டில் சௌகரியமாக இருந்தபடியே நம்மை மகிழ்வு படுத்தி, பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக நடத்திமுடித்த சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்திற்கு மக்கள் சார்பாகப் பாராட்டுக்கள்!

-ஷீலா ரமணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *