144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி கும்பமேளா தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா, மிகவும் புகழ்பெற்றது. திரிவேணி சங்கமத்தில் தினமும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகிறார்கள். குறிப்பாக மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி, பவுஷ்ய பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி ஆகிய 5 முக்கிய தினங்கள் அமிர்த ஸ்நானத்திற்கு சிறப்பாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்ற மவுனி அமாவாசை தினத்தில், திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர். கடந்த 44 நாட்களாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா, 45-வது நாளான மகா சிவராத்திரி தினமான இன்று நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று, நிறைவு நிகழ்ச்சிகள் மிகுந்த பிரமாண்டத்துடன் நடைபெறுகின்றன. கங்கைக்கரையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளாவின் நிறைவு நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கும்பமேளாவில் 63.36 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

