கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு அடுத்த பிரதமராகவும் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க் கார்னி கனடாவின் 24வது பிரதமராக உள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான சச்சித் மெஹ்ரா, மார்க் கார்னியின் வெற்றியை அறிவித்துள்ளார். மார்க் கார்னி, மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர். மேலும் அவர் 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8வது ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் வழங்கிய வெற்றி உரையில், “டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரை தொடரும் வரை, கனடா அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை நீக்காது. கனடா அரசு சரியான வழியில் முன்னேறி வருகிறது. நாங்கள் அமெரிக்காவுக்கு உரிய மரியாதை அளித்து, நம்பகமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை, நாங்கள் விதித்த வரி தொடரும்.” என கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

