மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஸ்கைப் -ஐ மே 5ம் தேதி முதல் சேவையை நிறுத்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்கைப் பயன்பாட்டிற்கு மாற்றாக, மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்பவரால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஸ்கைப் செயலியில், வீடியோ உரையாடல்கள், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்ற பல வசதிகள் உள்ளன. மேலும், பயனர்களுக்கு ஸ்கைப் தளத்தில் இன்ஸ்டன்ட் மெசேஜிங் மற்றும் ஃபைல் டிரான்ஸ்பர் போன்ற கூடுதல் வசதிகளை வழங்குவதற்காக பல சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டங்களை நடத்த ஸ்கைப் தளத்தை பயன்படுத்துகின்றன. கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் ஸ்கைப் பயன்பாட்டின் விரிவாக்கம் 2005ம் ஆண்டில் பயனர்களின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்தியது. 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் ஸ்கைப் தளத்தை 8.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பின்னர் தனது சேவைகளுடன் ஸ்கைப் தளத்தின் சேவைகளையும் இணைத்து வழங்கத் தொடங்கியது. கொரானா காலத்தில், ஜூம் செயலி முக்கியமாக வளர்ந்தது. வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள் போன்ற செயல்பாடுகளுக்கு, பயனர்கள் ஜூம் செயலியை அதிகமாக பயன்படுத்தினர். கூகுள் மீட் போன்ற மற்ற செயலிகளைப் போலவே, ஜூம் செயலியின் பயன்பாடு அதிகரித்ததால், ஸ்கைப் தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதற்கிடையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், ஸ்கைப் சேவைகளை வரும் 5ம் தேதி முதல் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5-ம் தேதி வரை ஸ்கைப் பயனர்கள் அந்த தளத்தை பயன்படுத்த முடியும் என்றும், அதன் பிறகு டீம்ஸ் செயலியை பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. ஸ்கைப் பயனர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டு டீம்ஸ் செயலியில் உள்நுழையலாம், மேலும் பழைய உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் அப்படியே இருக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

