அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமரின் பயணம் வருகிற 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 8 மற்றும் 9ம் தேதிகளில் மாஸ்கோவில் நடைபெறும் 22வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அத்துடன், மாஸ்கோ மற்றும் வியன்னாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்கிறார்.
இதற்கு முன்னதாக கடந்த 2019ல் பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் இதுவாகும். பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தைத் தொடர்ந்து முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.