பொங்கல் பண்டிகைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், விமர்சனம்

இசை கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்து வந்த விஜய் மீண்டும் குடும்ப பின்னணி கொண்ட கதையில் ரசிகர்களை எப்படி மகிழ்வித்துள்ளார் என்பது தான் இந்த வாரிசு.
விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, குஷ்பு சிறப்பு தோற்றத்தில் வரும் எஸ்.ஜே. சூர்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளார்கள்.
தொழிலதிபரான சரத்குமார் தனக்கு அடுத்து தனது சிம்மாசனத்தில் அமரப் போகும் வாரிசு யார் என்பதை முடிவு செய்ய மூன்று மகன்களுக்கு இடையே போட்டி வைக்க முயல்கிறார். ஆனால், அது பிடிக்காமல் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் விஜய் மீண்டும் குடும்பத்திற்குள் வந்து அங்கே உள்ள பிரச்சனைகளை எப்படி களைந்தார் என்பது தான் வாரிசு படத்தின் கதை.
அப்பாவின் அரியாசனத்திற்கு ஆசைப்படாத மகனாக வீட்டை விட்டு புறப்பட்டு செல்லும் விஜய் அம்மா ஜெயசுதாவின் பாசத்திற்கு கட்டுப்பட்டு சரத்குமார் – ஜெயசுதாவின் 60வது திருமண விழாவுக்காக மீண்டும் வீட்டுக்கு 7 ஆண்டுகள் கழித்து வருகிறார். அதன் பிறகு வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கிறது. அங்கே இருந்து படம் ஆரம்பம் ஆகிறது.
அண்ணன்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் இருவரும் விஜய் மீண்டும் வந்த நிலையில் எப்படி பொறாமை காரணமாக வில்லன்கள் ஆகின்றனர் என்றும் அவர்களை சமாளித்து திருத்துகிறாரா? அல்லது துவம்சம் செய்கிறாரா விஜய் என்பது தான் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ்.
வாரிசு படத்தின் ட்ரெய்லரில் பார்த்ததை போலவே படம் முழுக்க இளமை துள்ளல் உடன் உடம்பை வில்லாக வளைத்து ஆடுகிறார் விஜய். ஆக்‌ஷன் காட்சிகளில் தளபதியாக மாறி எதிரிகளை துவம்சம் செய்கிறார். அம்மாவிடம் செல்லப் பிள்ளையாகவும் அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகனாகவும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். ராஷ்மிகாவை கண்டதும் காதல், அதன்பின் ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி, யோகி பாபுவுடன் இணைந்து கொண்டு ரெட்டின் கிங்ஸ்லி போல காமெடி பண்ணுவது என ரசிகர்களை சிரிக்கவும் வைத்துள்ளார்.
ஆக்‌ஷன், காமெடி, ஆட்டம் பாட்டம், சென்டிமென்ட் என பக்கா பேக்கேஜ் ஆக இந்த படம் உருவாகி உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் கேமரா ஒர்க் நிச்சயம் ரசிகர்களை தியேட்டரில் ஆச்சர்யப்படுத்துகிறது. தமன் இசையில் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ரசிகர்களுக்கு விருந்து.
பல இடங்களில் படத்தையும் படத்தின் கதாபாத்திரங்களையும் காட்சிகளின் வழியே கலாய்த்து இருப்பது ஒரு இடத்துக்கு மேல் எரிச்சலை ஊட்டுகிறது. படத்தின் இரண்டாம் பாதி செல்லும் வேகத்திற்கு இணையாக முதல் பாதி இன்னமும் மெருகேற்றப்பட்டிருந்தால் மேலும், சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த பொங்கல் பண்டிகையை ஜாலியாக சொந்தங்களுடன் கொண்டாடும் படமாக சில குறைகளுடன் உருவாகி இருக்கிறது விஜய்யின் வாரிசு திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *