கமலின் ‘தக் லைஃப்’ படத்துக்காக இசையமைத்த ‘முத்த மழை’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் பாக்ஸ் ஆஃபீஸில் சோபிக்கவில்லை. மொத்தமாக இதுவரை ரூ.100 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்காக இசையமைக்கப்பட்ட ‘முத்த மழை’ பாடலை பாடகர் தீ பாடியிருந்தார். இதன் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் இதே பாடலை பாடகர் சின்மயி பாடினார். ஆனால் தீ பாடியதைவிட, சின்மயி பாடிய பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் சின்மயி குரலை வியந்து பாராட்டினர். அதே சமயம் தீ குரலுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
படம் வரும் முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் பாடல் படத்தில் எந்த இடத்தில் இடம்பெறும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை. இதனால் பாடல் வீடியோவை வெளியிட ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்தப் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

