அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீண்டும் ஈரானை தாக்கியதோடு, இந்த மோதலை இனியும் தொடர்ந்தால் ஈரான் பற்றி எரியும் என எச்சரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது.அமெரிக்காவுடன் ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக நெருக்கடி கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக இரு நாடுகளும் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படவில்லை. அதே சமயம் கடந்த 2018ல் அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்த பிறகு, ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி யுரேனியத்தை அதிகளவு செறிவூட்டி வருகிறது. அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும்.இந்த அளவை ஈரான் நெருங்கியிருப்பதாகவும் இன்னும் ஓரிரு மாதத்தில் அணு ஆயுதத்தை தயாரித்து விடும் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்தால் அது இஸ்ரேலை அழிக்க முயற்சிக்கும் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஈரானின் அணு சக்தி மையங்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டிலேயே இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு ரகசிய டிரோன் தளத்தை அமைத்து அதன் மூலம் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி தாக்குதல் நடத்தியது.மேலும் 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகள் கொண்டு 100 இலக்குகளில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ் சேதமடைந்துள்ளது. பூமிக்கு அடியில் உள்ள இந்த அணுசக்தி மையத்தின் மின்சார விநியோக கட்டமைப்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதுதவிர போர்டோ, இஸ்பஹான் ஆகிய அணு மையங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானின் ராணுவ படை தலைவர் முகமது பகேரி, துணை ராணுவ புரட்சிகர படை தலைவர் சலாமி, ஏவுகணை தலைவர் ஹஜிசாதே மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவிலும், நேற்று அதிகாலையிலும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை நோக்கி 200க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலின் அயர்ன்டோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் வானிலையே இடைமறித்து தாக்கினாலும், பல ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளை தகர்த்தன.இதனால் டெல் அவிவ்வை ஒட்டிய மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள ரிஷான் லெஷியான் பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மத்தியில் குண்டுகள் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்டது. இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு 10 நிமிடங்கள் முன்பாக செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை தகவலை இஸ்ரேல் ராணுவம் அனுப்பியதால் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். ஈரானின் இந்த தாக்குதலில் 4 பேர் பலியானதாகவும் 80 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.4 வீடுகள் கடுமையாக சேதமடைந்திருப்பதாக இஸ்ரேல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் இரவு முழுவதும் சைரன் சத்தங்களும் வானில் ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டதில் வெடி சத்தங்களும் கேட்டபடி இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஈரானின் ஏவுகணைகளை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரிகள் கூறி உள்ளனர்.இந்த தாக்குதலை தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக இஸ்ரேல் நேற்றும் ஈரான் மீது 70க்கும் மேற்பட்ட போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. ஈரானும், இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை மேலும் தீவிரமாக்கக் கூடாது என இரு நாடுகளையும் உலக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.நேற்று இரவிலோ, இன்று அதிகாலையிலோ ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் ஈரானை எரித்து விடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் இனியும் காத்துக் கொண்டிருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
விமான நிலையங்களை மூடிய இஸ்ரேல், ஈரான்
இருதரப்பு தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேலும், ஈரானும் நேற்று தங்கள் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளன. விமான நிலையங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என்றும் ஈரான் அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதே போல, டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அண்டை நாடுகளான லெபலனான், ஜோர்டான், சிரியா ஆகியவை மூடப்பட்டிருந்த தங்கள் வான் வழியை நேற்று வழக்கமான பயன்பாட்டிற்கு கொண்டு வந்தன. மேலும் 2 ராணுவ அதிகாரிகள் பலி
ஏற்கனவே ஈரானின் 3 முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில் நேற்றைய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை துணை ஜெனரல் கோலம்ரிஷா மெஹ்ராபி, துணை ராணுவ செயல் அதிகாரி ஜெனரல் மெஹ்டி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர 2 போலீஸ் அதிகாரிகளும் பலியாகி உள்ளனர்.

