அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் 787 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். இந்தச் சம்பவம் நடந்ததும், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இந்த விபத்தில் பலியான அனைவருக்கும் தலா ரூ. 1 கோடி டாடா நிறுவனம் இழப்பீடாக அறிவித்துள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த பகுதியைப் பார்வையிட்டு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
இந்நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் நடந்த விபத்து முழு நாட்டையும் உலுக்கியது. இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு நான் நேரில் சென்றேன். குஜராத் மாநில அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்தது.
சம்பவம் நடந்ததும் மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்படத் துவங்கிவிட்டனர். முடிந்தவரை மீட்கவும், தீயை அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அதனால், உடல்கள் விரைவாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
விமான விபத்துகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) உடனடியாக அங்கு விரைந்தது. நேற்று மாலை 5 மணியளவில் விமானத்தின் கருப்புப் பெட்டியை AAIB கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், விபத்து நடந்த இறுதி நிமிடங்களில் விமானத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் துல்லியமாகக் கிடைக்கும் என AAIB தெரிவிக்கிறது. மேலும், முழு விசாரணையை மேற்கொண்ட பிறகு, அது தொடர்பான அறிக்கையை AAIB சமர்ப்பிக்கும்.
நாட்டில் மிகவும் கடுமையான பாதுகாப்புத் தரநிலைகள் உள்ளன. இந்தச் சம்பவம் நடந்ததும், போயிங் 787 விமானங்களை மேலும் கண்காணிக்க வேண்டியுள்ளதை உணர்கிறோம். மேலும், டிஜிசிஏ (சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் – DGCA)வும் 787 விமானங்களை மேலும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. இன்று நமது இந்திய விமானக் குழுவில் 787 விமான ரகங்கள் 34 உள்ளன. அதில், 8 ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். மேலும், மற்ற அனைத்தும் உடனடியாக ஆய்வு செய்யப்படும்.
உயிர் இழந்தவர்களின் கதைகளை அறியும்போது மிகவும் வேதனையளிக்கிறது. பயணிகளின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் செயல்முறையை எளிதாக்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். உடல்களை அடையாளம் கண்டு அந்தந்த குடும்பங்களுக்கு வழங்குவதற்காக டிஎன்ஏ பரிசோதனையும் ஒருபுறம் நடைபெறுகிறது.
குஜராத் அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை உறுதி செய்யப்பட்டவுடன், உடல்கள் அந்தந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. விரைவில் அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும்.
இந்த சம்பவத்தை மேலும் விசாரிக்கவும், இந்த சம்பவத்தைச் சுற்றியுள்ள அனைத்து கோட்பாடுகள் மற்றும் பிற தகவல்களை ஆராயவும், இந்த விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்தும் மற்றொரு குழுவை அமைப்பது மிகவும் நல்லது என்று நாங்கள் கருதினோம். நாங்கள் மற்றொரு உயர் மட்டக் குழுவை அமைக்க முடிவு செய்து, அந்தக் குழுவை அமைத்துள்ளோம்.
இந்தக் குழுவின் தலைவராக உள்துறைச் செயலாளர் இருப்பார். மேலும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர், உள்துறைச் செயலாளர், சம்பவம் நடந்த குஜராத் மாநிலத்திலிருந்து ஒரு பிரதிநிதி, குஜராத் மாநிலப் பேரிடர் மீட்பு ஆணையத்தின் பிரதிநிதி, அகமதாபாத் காவல் ஆணையர், இந்திய விமானப்படையிலிருந்து ஆய்வு மற்றும் பாதுகாப்புத் துறையின் டிஜி, டிஜி பிசிஏஎஸ், டிஜி டிஜிசிஏ, ஐபியின் சிறப்பு இயக்குநர் மற்றும் தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தின் இயக்குநர் உள்ளிட்டவர்கள் இருப்பார்கள். இந்தக் குழு விசாரணையை முடித்து மூன்று மாதங்களில் தங்கள் அறிக்கையைத் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

