இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

அமெரிக்கா அரசியல் இந்தியா உயர்கல்வி உலகம் கனடா சிறப்பு செய்திகள்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் தணியாத நிலையில், மீண்டும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்தது கவலைக்குரியதாக அமைந்துள்ளது.டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் மூன்றாம் ஆண்டு அறிவியல் பாடப்பிரிவில் பயின்று வந்த ஷிவாங்க் அவஸ்தி (20) என்பவரே இந்த துயர சம்பவத்தின் பாதிக்கப்பட்டவர். கடந்த 23ஆம் தேதி கல்லூரிக்கு அருகிலுள்ள ஹைலேண்ட் க்ரீக் ட்ரெயில் பகுதியில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் கடுமையாக காயமடைந்த ஷிவாங்க் அவஸ்தி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழக வளாகம் உடனடியாக மூடப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *