தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் முதன்மை செய்தி விவசாயம்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகிய அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன, அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *