இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தில் அதிக மதிப்புடைய இந்திய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது அந்தத் தடையை நீக்கி, இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை மீண்டும் பயன்படுத்த நேபாளம் அனுமதி அளித்துள்ளது.இதுதொடர்பாக நேபாள ராஷ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிவிப்பில், நடைமுறையில் உள்ள விதிகளின்படி, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் 2016ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்திய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.25,000 வரை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

