உலகிலேயே பரப்பளவில் பெரிய நாடான ரஷ்யாவில் தான் வனப்பகுதியும் அதிகம். உலகின் வனப்பகுதியில் இங்கு மட்டும் 20.1% வனப்பகுதி உள்ளது. அடுத்து அமேசான் காட்டை உள்ளடக்கிய பிரேசில் நாடு. 11.7% பங்களிப்பை வழங்குகிறது.
உலக வனப்பரப்பில் கனடா 8.9% பங்களிப்பையும், அமெரிக்கா 7.5% பங்களிப்பையும் வழங்குகின்றன. சீனா 5.5% பங்களிப்பையும், ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு 3.4% பங்களிப்பையும் அளிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு 3.2% ஆகவும், உலகளவில் பரப்பளவில் 14-வது மிகப்பெரிய நாடான இந்தோனேசியா வனப்பரப்பில் 8-வது இடத்தில் உள்ளது. உலக வனப்பரப்பில் இதன் பங்களிப்பு 2.3% ஆகும்.
இந்த வரிசையில் 1.8% பங்களிப்புடன் இந்தியா, 9-வது இடத்தில் உள்ளது. உலகளவில் பரப்பளவில் இந்தியா 7-வது மிகப்பெரிய நாடாக இருந்தாலும், வனப்பரப்பில் 9-வது இடத்தில் தான் உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவும், வட அமெரிக்க நாடான மெக்சிகோவும் தலா 1.6% பங்களிப்புடன் 10-வது இடத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
உலகின் மொத்த வனப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்டவை ரஷ்யா, கனடா, பிரேசில், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டும் உள்ளன. உலகில் மூன்றில் இரண்டு பகுதி காடுகள் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் மட்டுமே உள்ளன.

