2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தற்போது இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதற்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதன் மறுநாளில், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை எதிர்கொள்ள அபிநந்தன் மிக்-21 பைசன் போர் விமானத்தில் சென்றார்.எதிரி விமானங்கள் எண்ணிக்கையிலும் தொழில்நுட்ப ரீதியிலும் வலுவாக இருந்தபோதிலும், அபிநந்தன் துணிச்சலுடன் போரிட்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். பின்னர் அவரது விமானம் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்ததால், அவர் பாகிஸ்தான் பகுதியில் பாராசூட் மூலம் தரையிறங்கினார்.அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு சுமார் 60 மணி நேரத்தில் அவர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்பினார்.அபிநந்தனின் வீரத்தைப் பாராட்டி, இந்தியாவின் மூன்றாவது உயரிய போர்க்கால விருதான ‘வீர் சக்ரா’ அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவர் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.தனது விமானப்படைப் பணியை நிறைவு செய்த அவர், நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதி இந்திய விமானப்படையில் இருந்து விலகினார். இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் முறையான ஒப்புதல் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பெற்ற அவர், கோவாவை தலைமையிடமாகக் கொண்ட ‘பிளை 91’ தனியார் பயணிகள் விமான நிறுவனத்தில் ஆகஸ்ட் மாதம் விமானியாக இணைந்துள்ளார்.

