பிரெஞ்ச் ஓபன் 2023; உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் அல்காரஸை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி

உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான அல்காரஸை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் பங்கேற்கவில்லை. இதனால் ஜோகோவிச் 23வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இளம் வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் கடுமையான சவால் அளிப்பார் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச் – அல்காரஸ் மோதினர்.
இதில் முதல் செட்டை 6-3 என்று ஜோகோவிச் கைப்பற்றி அசத்தினார். ஆனால் 2வது செட்டில் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக ஆடிய அல்காரஸ், 7-5 என்று கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் 3வது செட் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் 2வது செட்டை இழந்த பின்னர், ஜோகோவிச் பீஸ்ட் மோடிற்கு மாறினார். இதனால் 3வது செட்டை 6-1 என்று ஆதிக்கம் செலுத்தி கைப்பற்றிய ஜோகோவிச், 4வது செட்டிலும் 6-1 என்று கைப்பற்றி வெற்றிபெற்றார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் தகுதிபெற்றார். இதுவரை 70 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் விளையாடியுள்ள ஜோகோவிச் 34வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்ற வீரர் என்ற நடாலின் சாதனையை சமன் செய்துள்ள ஜோகோவிச், பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றி 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிக முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் ஆடிய வீரர் என்ற சாதனையையும் ஜோகோவிச் படைத்துள்ளார். அதேபோல் கேஸ்பர் ரூட் – ஸ்வெரெவ் இடையிலான அரையிறுதிப் போட்டியில் வெல்லும் வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.