சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான 112 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரக்கு பெட்டகத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது, 450 மூட்டைகளில் தலா 50 கிலோ எடைக் கொண்ட படிகக் கற்களின் அடியில், 37 பாக்கெட்களில் தலா 3 கிலோ சூடோ எபிஃட்ரின் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தை மதிப்பில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஷிப்பிங் ஏஜென்ட்களான அபுதாஹீர் மற்றும் அகமது பாட்ஷாவை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதே போன்று 4 முறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருட்களை கடத்தியது தெரியவந்தது. குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.