முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாளை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் 62 ஆவது குரு பூஜையை ஒட்டி அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அதே நாளில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கும் தெப்பக்குளத்தில் உள்ள மருதுசகோதரர்களின் சிலைக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேவர் அரங்கத்தினை முதலமைச்சர் ஸ்டாலின், திங்கட்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தேவர் குருபூஜையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன் கேமிரா பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளதுடன், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

