பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; திருச்சி விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டார்

அரசியல் இந்தியா உயர்கல்வி கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி திருச்சி வந்தார் அவரை ஆளுநர் ஆர். என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்பட 41 பேர் கலந்துகொண்டனர்.
விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” ஆங்கிலப் பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார்.
பிரதமர் மோடி திருச்சி வருகை காரணமாக திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருச்சி விமான நிலைய வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப் படையினர், கமாண்டோ படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை சாலையிலும் சுமார் 4,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இன்று கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார்.
தங்கபதக்கம் பெற்ற சுமார் 100 மாணவ, மாணவிகள் ஒரு அரங்கத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் முன் வரிசையில் பிரதமர் மோடி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக ஆறு முகங்களைக் கொண்ட மயிலேறிய முருகன் ஐம்பொன் சிலையை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா தொடங்கிய நிலையில் தங்கம் பதக்கம் பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்.
பின்னர் விமான நிலையத்தில் நடந்த விழாவில், விமான போக்குவரத் துறை, ரயில்வே தேசிய நெடுஞ்சாலைத் துறை, துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அணுசக்தி துறை மற்றும் உயல் கல்வி துறை உள்பட 7 துறைகளில் ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
விமான நிலையத்தில் நடைபெற்ற முனையம் திறப்பு விழாவுக்கு வந்த பொதுமக்களும், பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் உரிய அனுமதிச் சீட்டை காட்டிய பிறகே நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *