மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2 ஆம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்களும் டிரெய்லரும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் வெளியாகும் தென்னிந்தியாவின் முதல் படம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது.