சென்னை தியாகராய நகரின் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி தேர்தல் பரபுரையில் ஈடுபட்டார். சாலையில் இருபுறங்களிலும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டன. தென்சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடத்தப்பட்ட வாகனப் பேரணியை ஒட்டி பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் (ட்விட்டர்) கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது. சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம். பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில். இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை. இவ்வாறு பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் (ட்விட்டர்) தெரிவித்துள்ளார்.

