புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் அறிவிப்பு.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி வானிலை

புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மேலும், உயிரிழப்பு, வீடு பாதிப்பு மற்றும் கால்நடை இழப்பு போன்ற அனைத்து நிவாரணங்களுக்கு ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி கூறியதாவது, புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது, அதில் 50 செமீ மழை பதிவாகியுள்ளது. முகாம்கள் அமைத்து உணவு வழங்கப்பட்டு, எம்எல்ஏக்களும் அந்தந்த பகுதிகளில் உணவு வழங்கியுள்ளனர். வருவாய்துறை சார்பில் 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.மீட்புப் பணியில் 12 பஸ்கள் மற்றும் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேரிடர் மீட்பு படையினர் 55 பேர் இரண்டு குழுக்களாக செயல்படுகின்றனர். 70 ராணுவத்தினர் மீட்புப் பணியில் உள்ளனர். இந்நிலையில், நால்வர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். 3 பேர் காயமடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வழங்க தீர்மானித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய இடங்களில் 10,000 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, அதற்காக ஹெக்டேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், தென்பெண்ணை ஆறு பாகூரில் உட்புகுந்துள்ளது. வீடுர் அணை திறக்கப்பட்டதால் வில்லியனூர் ஆரியப்பாளையம் உள்ளிட்ட கரை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடூர் மற்றும் சாத்தனூர் அணை திறப்புக்கு முன்பாக தகவல் வழங்கப்பட்டது, ஆனால் கூடுதல் நீர் வருவதால் பாதிப்பு ஏற்பட்டது. நகரப்பகுதிகளில் மின்விநியோகம் தற்போது 90 சதவீதம் அளவில் வழங்கப்படுகிறது, மீதமுள்ள 10 சதவீதம் மாலைக்குள் வழங்கப்படும். கிராமப்பகுதிகளிலும் மின்விநியோகம் வழங்கப்படுகிறது. கார் மற்றும் டூவீலர் பாதிப்புகள் தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும். சாலைகள் மற்றும் பாலங்கள் உட்பட அடிப்படைக் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்காக ரூ.100 கோடி மத்திய அரசிடம் கேட்டு தலைமைச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்தியக்குழு வந்து பார்வையிடவும் கோரியுள்ளோம் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *