நாளை டெல்லி வரும் புதின் – இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் கண்டுபிடிப்பு செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இந்தியா–ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று (டிசம்பர் 3) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளாலும் கையெழுத்தானாலும், நடைமுறைக்கு வர ரஷ்ய நாடாளுமன்றத்தின் அனுமதி தேவைப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இதற்கான சட்ட அனுமதி கோரப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது ‘ஸ்டேட் டுமா’ கீழ்சபை அதிகாரப்பூர்வமாக அதை நிறைவேற்றியுள்ளது.உக்ரைன் போர் நீடிக்கும் சூழலில் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. அதே சமயம், புதின் நாளை (டிச. 4) இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் உலக நாடுகளின் கவனம் இந்த பயணத்திலும் ஒப்பந்தத்திலும் விழுந்துள்ளது.இந்த புதிய ராணுவ ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் ரஷ்யா இரு நாடுகளின் ராணுவத்தளங்கள், துறைமுகங்கள், வான்வெளிகள் அனைத்தையும் எந்தத் தடையும் இன்றி பயன்படுத்திக்கொள்ள முடியும். போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல், ராணுவப் பயிற்சிகள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள் போன்ற அவசர சூழல்களில் இது பெரிய உதவியாக இருக்கும்.குறிப்பாக ஆர்க்டிக் போன்ற முக்கிய பிரதேசங்களில் இந்தியாவின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் கூடுதல் ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான முடிவாகும் என்று ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்.புதினின் இந்திய பயணத்தின் போது எஸ்-500 வான்பாதுகாப்பு அமைப்பு, சுகோய்-57 போர் விமானங்கள் போன்ற முக்கிய ராணுவ கொள்முதல் விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நீண்டகால பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய படியாகக் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *