திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் விழா, இன்று மகா தீபம் ஏற்றத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.இன்று மாலை 5.50 மணிக்கு அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி, தங்க கொடிமரம் முன் சிறப்பு தரிசனம் அளித்தார். பின்னர் கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.தொடர்ந்து மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை உச்சியில் பருவதராஜர் குல வம்சத்தினர் பாரம்பரிய முறையில் மகா தீபம் ஏற்றினர். தீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தன. வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.மலை மீது தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மகா தீபம் அடுத்த 11 நாட்கள் பக்தர்களுக்கு காணக்கிடைக்கும்.விழாவையொட்டி 14 கி.மீ நீளமுள்ள மலைப் பிரகாரத்தை சுற்றி அதிகாலையிலிருந்தே கிரிவலம் சென்றனர். இடைவிடாத மழையிலும், இன்று மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செய்துள்ளனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை பல லட்ச கணக்கான பக்தர்கள் தரிசித்தனர் . அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை எட்டியது.

