யார் இந்த ராகவா லாரன்ஸ்?- நீளும் சாதனை பட்டியல்!

சினிமா

திரைப்பட நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் திரைப்பட தயாரிப்பாளர், நன்கொடையாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர், மக்களை ஈர்த்தவர், அவர் தான் நமது ராகவா லாரன்ஸ்.

யார் இந்த ராகவா லாரன்ஸ்?

கடந்த 1976- ஆம் ஆண்டு அக்டோபர் 29- ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் பிறந்தவர் ராகவா லாரன்ஸ். இவரது இயற்பெயர் லாரன்ஸ் முருகையன். கடந்த 1993- ஆம் ஆண்டு நடன இயக்குநராக அறிமுகமான பிறகு, 1998- ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என 10 திரைப்படங்களை இயக்கி நடித்துள்ள ராகவா லாரன்ஸ், அஜித்குமார், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வரும் பாடல்களில் நடனக்கலைஞராகப் பணியாற்றி உள்ளார்.

சிறந்த நடன அமைப்புக்காக 4 பிலிம்ஃபேர் விருதுகளையும், சிறந்த நடன இயக்குநராக 3 நந்தி விருதுகளையும், 2 தமிழ்நாடு திரைப்பட மாநில விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.

ரஜினி மீது பக்தியும், சமூக சேவையும்!

நடிகர் ரஜினிகாந்த் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் வைத்துள்ள ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த்தின் கொள்கை வழியைப் பின்பற்றி சென்னையில் ராகவேந்திரா சுவாமி கோயிலை காட்டியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் மறைவிற்கு பிறகு கடந்த 2015- ஆம் ஆண்டு அறக்கட்டளையைத் தொடங்கி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகம் அமைத்து, இலவச கல்வியையும் வழங்கி வருகிறார். கல்வி மட்டுமின்றி விவசாயிகள், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் யாருடைய உதவியும் இன்றி தனது சொந்த பணத்தில் வழங்கி வருகிறார். தமிழக மக்கள் மனதில் ராகவா லாரன்ஸ் என்றால் தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *