செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்துள்ளார். இந்த பயணத்தில் 12 பொதுக்கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகள் நடத்தியுள்ளார். 375-க்கும் மேற்பட்டோருடன் கலந்துரையாடியுள்ளார்.
சுமார் ஐந்து மாதங்களாக நாடு முழுவதும் கவனம் பெற்ற நடை பயணம் ஜனவரி 30ல் நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது யாத்திரையை அவர் நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து எஸ்.கே. மைதானத்தில் பிரமாண்ட நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.