ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. புதின் வசிக்கும் பகுதிக்கு நோக்கி உக்ரைன் 91 டிரோன்களை அனுப்பியதாகவும், அவை அனைத்தும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் முயற்சி மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய பாதுகாப்பு பகுதிகளை குறிவைத்ததாக ரஷ்யா கூறுகிறது. இதில் எந்த உயிரிழப்பும் அல்லது பெரும் சேதமும் ஏற்படவில்லை என்றும், பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.இதற்கிடையில், உக்ரைன் தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டுக்கு உடனடி அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. ஆனால், முன்பு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உக்ரைன் மறுத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய குற்றச்சாட்டால், ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகள் மேலும் சிக்கலாகியுள்ளன. ஏற்கனவே பல மாதங்களாக நீடித்து வரும் இந்த போர், இரு நாடுகளுக்கும் மட்டுமின்றி உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.ரஷ்யாவின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில் போர் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் உருவாகியுள்ளது. அமைதி முயற்சிகள் வெற்றி பெறுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது.

