இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்சின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கின்றனது. சர்வதேச அளவில் மிக உயர்ந்த தரத்துடைய ரபேல் போர் விமானங்களை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. இந்தியாவும் விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளன. 36 ரபேல் போர் விமானங்களை வாங்கிய நிலையில், மேலும் 2 ரபேல் விமானத் தொகுதிகளை வாங்குவதற்கான ஆலோசனைகள் விமானப்படை மூலம் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில், இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு கடந்த 9ம் தேதி இந்த ஒப்புதலை வழங்கியது. தற்போது வாங்கப்படும் 26 ரபேல் போர் விமானங்களில் 22 விமானங்கள் ஒற்றை இருக்கை வசதியுடன் மற்றும் 4 விமானங்கள் இரட்டை இருக்கை வசதியுடன் உள்ளன. மேலும், இந்த விமானங்களின் பராமரிப்பு, தளவாடங்கள், பணியாளர் பயிற்சி மற்றும் உள்நாட்டு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கான விரிவான தொகுப்பும் இதில் அடங்கியுள்ளது. ரபேல்-எம் விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து இயக்கப்படும்.இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் ரபேல் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே இன்று டெல்லியில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைபெற்றது. இரு நாடுகளும் 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்குவதற்கான 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

