பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கின்றன. தற்போது நாம் பயன்படுத்தும் பான் கார்டுகளை ஆன்லைன் மூலம் எளிதாக புதுப்பிக்க முடியும். இந்தியாவில் பல்வேறு சேவைகளை மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அப்டேட் செய்து டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. இதற்கான ஒரு பகுதியாக, மத்திய அரசு பான் 2.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நமது பான் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும். பான் 2.0 திட்டத்தின் மூலம் புதிய பான் கார்டுகளை பெறலாம், இதில் க்யூஆர் கோடு உள்ளதாகவும், நமது தகவல்கள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.அதற்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும். பான் கார்டு தகவல்களை திருடுவதற்கான தடுப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள க்யூ ஆர் கோடு, ஒருவரின் தகவல்களை திருடுவது மிகவும் கடினமாக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நமது பான் எண் மற்றும் பான் கார்டை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவரின் பெயரில் போலியான பான் கார்டுகளை உருவாக்குவது சிரமமாக இருப்பதால், இது கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என அரசு தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பழைய பான் கார்டுகளை புதுப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

