அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

அரசியல் ஆரோக்கியம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் முதன்மை செய்தி

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிக்கும் உரிமையையும் உள்ளடக்கியது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத மட்கும் சானிட்டரி நாப்கின்களை மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. மேலும், மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனிக் கழிப்பறைகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலமே ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது என்றும், மாணவிகளுக்கு தனிக் கழிப்பறை வசதி அளிக்காதது கல்வி பெறும் உரிமையை மீறும் செயலாகும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 19ன் படி, கல்வி நிறுவனங்கள் மாணவிகளின் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, அதற்கான இணக்க அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *