காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 வயது தமிழக பக்தர் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற போது பலியானார். அவரது மனைவி உட்பட 9 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். நேற்று அந்த பகுதியில் பெருமழை கொட்டியது. கத்ரா நகரில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை 8.30 மணி அளவில் பங்கங்காவிற்கு அருகில் உள்ள குல்ஷன் கா லங்கரில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இது யாத்திரை தொடங்கும் இடமாகும். இந்த பகுதியில் இருந்து அரக்கோணத்தை சேர்ந்த குப்பன் சீனிவாசன் (70), அவரது மனைவி கே. ராதா (66), அரியானாவைச் சேர்ந்த ராஜீந்தர் பல்லா (70), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லீலா ராய்க்வார் உள்ளிட்டோர் யாத்திரைக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது நிலச்சரிவு ஏற்பட்டதில் சென்னை பக்தர்கள் உள்பட 10 பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு அங்குள்ள நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அரக்கோணம் பக்தர் குப்பன் சீனிவாசன் உயிரிழந்தார். அவரது மனைவி ராதா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுரேஷ் குமார் (66), நிகில் தாக்கூர் (26), விக்கி சர்மா ஆகியோர் உள்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை பக்தரின் மறைவுக்கு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பள்ளி இடிந்து மாணவன் பலி காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் அரசு தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. இதில் 4 மாணவர்கள், ஒரு ஆசிரியர் சிக்கிக்கொண்டனர். இதில் 5வயது மாணவர் இஷன் அலி பலியானான்.

