மலேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகுக்கு இந்தியா கொடுத்த மிகப் பெரிய கொடை தமிழ் மொழிதான்” என்று பெருமையுடன் தெரிவித்தார். தமிழ் மொழியும் இலக்கியங்களும் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும் தன்மையுடையவை என்றும், மனித குலத்தின் வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் தங்கள் அறிவு, பண்பாடு மற்றும் திறமையால் அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். உலகின் பல நாடுகளில் தமிழர்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவது தமிழின் பெருமையை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.மேலும் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என தெரிவித்தார். மலேசியாவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேலும் வளர்க்கும் நோக்கில், மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த மையம் தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் திருக்குறள் கருத்துகளை உலகளவில் பரப்பும் வகையில் செயல்படும் என அவர் கூறினார். பிரதமரின் இந்த உரை மலேசியத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

