இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி – போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். இவர்களில் ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து எல்லிஸ் பெர்ரி களமிறங்கினார்.
இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட லிட்ச்பீல்ட் – பெர்ரி ஜோடி விரைவாக ரன் குவித்தது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அதிரடியாக ஆடிய லிட்ச்பீல்ட் வெறும் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் பெர்ரி அரைசத்தை நோக்கி முன்னேறினார்.
155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை அமன்ஜோத் கவுர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் லிட்ச்பீல்ட் 119 ரன்களில் போல்டானார். சிறிது நேரத்திலேயே
பெர்ரி அரைசதம் அடித்தார். பின்னர் வந்த பெத் மூனி 24 ரன்களிலும், அன்னபெல் சுதர்லண்ட் 3 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இதனிடையே பெர்ரி 77 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் கார்ட்னர் (63 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. 49.5 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியும் சரிசமமாக பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தது. இதனால், ஆட்டம் விறுவிறுப்பாக கடைசிவரை சென்றது. இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் மோதுகிறது.
 
	

 
						 
						