ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் வீரர் ரபெல் நடால்

செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரர் ரபெல் நடால், டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான இவர், 2001 ஆம் ஆண்டில் ஏ.டி.பி. டென்னிஸ் உலகில் காலடி வைத்தார். ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் மற்றும் 36 மாஸ்டர்ஸ் உள்ளிட்ட 92 பட்டங்களை வென்றுள்ளார். களிமணிகளின் நாயகனாக விளங்கும் நடால், பிரெஞ்ச் ஓபனில் 14 முறை சாம்பியன் ஆனார்.2008 ஆம் ஆண்டில் பீஜிங் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார், மேலும் 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் பெற்றார். 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடரில் 2வது இடத்தை பிடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியான ஏ.டி.பி. ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதன்முறையாக ‘நம்பர்-1’ இடத்தை கைப்பற்றியவர், 209 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். ஒற்றையர் பிரிவில் ‘கேரியர் கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்ற மூன்று வீரர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார். இடுப்பு பகுதி காயத்தால் பாதிக்கப்பட்ட நடால், அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர், அவர் சமீபத்தில் போட்டிகளில் ஏதும் பங்கேற்கவில்லை. கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார், அங்கு ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் வெளியேறினார், மேலும் இரட்டையர் பிரிவில் காலிறுதியில் தோல்வியடைந்தார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் ‘டேவிஸ் கோப்பை காலிறுதியில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் முடிந்த பின், நடால் டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் நடால் வெளியிட்ட செய்தியில், ”கடந்த இரண்டு ஆண்டுகளில் போட்டியில் விளையாடுவது மிகவும் சிரமமாக இருந்தது. எனக்கு ஏற்ப்பட்ட காயத்தால் சரியாக விளையாட முடியவில்லை என்று உணர்கிறேன். ஓய்வு எடுப்பது கடினமானது. வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளது,” என்று தன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *