தந்தை பெரியார் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி ஈரோட்டில் செப்டம்பர் 17ல் பிறந்தார். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.
சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன.
இவ்வாறு சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட பெரியார் பிறந்த தினம் தமிழகம் ழுழுவதும் திராவிட கட்சிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.